வைத்திலிங்கம் அலுவலகத்தில் 2வது நாளாக தொடரும் ED ரெய்டு.!
சென்னையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. அதன்படி, சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வைத்திலிங்கம் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று முதல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார் பேட்டையில் ஸ்ரீராம் நிறுவன அலுவலகத்தில் சோதனை தொடர்கிறது. தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையின் சோதனை தொடர்கிறது.
இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் விடுதி, சிஎம்டிஏ அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையும், ஸ்ரீராம் சிஎப்ஓ கோட்டீஸ்வரி வீடு, தியாகராயநகர் பர்கிட் சாலை அலுவலகத்தில் சோதனை நிறைவு பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.