IND vs NZ : ‘அதனை யாராலும் கணிக்க முடியாது’..! 2-வது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய கம்பீர்!
நாளை நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
புனே : இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால், இனி இருக்கும் 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்புடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பேட்டிக் கொடுப்பது வழக்கமாகும். அந்த பேட்டியில் பயிற்சியாளர், அடுத்த நாள் நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கும் வீரர்களின் உடல் தகுதி குறித்தும், கடந்த போட்டியில் செய்த தவறை சுட்டி கட்டியும் மற்றும் பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விக்கு பதில் அளித்தும் அந்த பேட்டியில் பேசுவார்கள்.
அதன்படி, நாளை நடைபெறும் போட்டிக்கு முன்னதாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பானது நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் நாளை நடைபெறும் ஆட்டத்தை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அவர் பேசுகையில், “உலகில் உள்ள எந்த விளையாட்டு ஜாம்பவானாலும் விளையாடுவதற்கு முன்பு மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாது. நாளை புனே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு பிட்ச் இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.
அதுவும், நாளை இரு அணிகளும் இந்த பிட்சில் விளையாடாதது வரை எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது. மேலும், நாளைய போட்டிக்கான பிளையிங் லெவன் இது வரை நாங்கள் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக வெற்றி பெரும் வகையிலே அந்த பிளையிங் லெவேன் இருக்கும்”, என கம்பீர் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய கம்பீர், “தற்போது டெஸ்ட் போட்டிகளில் டிரா என்பது அதிகமாக இருந்து வருகிறது. அது போல ஒரு போட்டி டிரா ஆவது சலிப்பை ஏற்படுத்துகிறது. வெற்றியை உறுதி செய்யும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒரு முனையில் நன்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதனால், டெஸ்ட் போட்டிகளில் டிரா ஆவதை ரசிகர்கள் விரும்புவதில்லை. இதனால், வெற்றி பெறுவதற்கே நாங்கள் முற்படுவோம்”, என பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர் கூறி இருந்தார்.