IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?
நியூஸிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது.
இந்த தொடரின் 2-வது போட்டியானது நாளை மறுநாள் அக்.-24 (வியாழக்கிழமை) அன்று புனேவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவுள்ளார் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த போட்டியில், நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே முழங்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன் பின் அவர் விளையாட மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 99 ரன்கள் சேர்த்து வெற்றிக்காகப் போராடினார்.
ஆனால், மீண்டும் நியூஸிலாந்து அணி பேட்டிங் வந்த போது ரிஷிப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதனால், அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், அணியின் முக்கிய வீரராக அவர் இருப்பதால், அவர் இல்லாமல் போனால் அது இந்திய அணிக்குப் பேரிடியாக அமைந்து விடும் என்பதால் அவர் மீது அக்கறை எடுத்து இந்திய அணி கவனித்து வருவதாக ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று ரிஷப் பண்ட்டும், அக்சர் பட்டேலும் ஜிம்மில் பயிற்சி செய்து வருவதாக தெரியவந்தது. மேலும், ரிஷப் பண்ட் முழுமையான உடற் தகுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் மூலம், பண்ட் இந்த 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
அதே போல நியூஸிலாந்து அணியில் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.