“மெல்ல விடை கொடு மனமே” உலகக்கோப்பையும்…தென்னாப்பிரிக்காவும்!! மோசமாக அமைந்த 2024?
கடந்த 5 மாதங்களில் 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பையை தவறவிட்டுள்ளது தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள்.
தென்னாப்பிரிக்கா : உலகக்கோப்பை போட்டி என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு ராசியே இல்லாமல் ஆகிவிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், 5 மாதங்களில் 2 முறை டி 20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதாவது, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில், வெற்றி பெற்று தங்களுடைய முதல் டி20 கோப்பையை வாங்கலாம் என விளையாடிய நிலையில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதைப்போல, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இதுவரை தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் அல்லது பெண்கள் அணிகள் உலகக் கோப்பையை வென்றது இல்லை. உலகக்கோப்பையை வெல்வது அவர்களுக்கு ஒரு கனவாகவும் இருந்து வருகிறது. கடைசி வரை போராடி அவர்கள் தோல்வி அடைந்து அவர்கள் கண்ணீருடன் உலகக்கோப்பையைப் பார்க்கும்போது நமக்கே கண்கள் கலங்கிவிடும். குறிப்பாக, நடந்து முடிந்த ஆடவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.
அப்போது தென் ஆப்பிரிக்கா அணி வீரர் டேவிட் மில்லர் கணத்த இதயத்துடன் கண்ணீர் விட்டு அழுதார். இந்தியா கோப்பையை வென்றது நமக்கு மகிழ்ச்சி அளித்தாலும் வீரர்கள் கண்கலங்கியதைப் பார்த்த போது நமக்கே கண்கள் கலங்கிவிடும். அதைப்போலத் தான் நேற்று மகளிர் உலகக்கோப்பையில் தோல்வி அடைந்தபோது தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகளும் கண்ணீரை மறைத்துக் கொண்டு சோகத்துடன் உலகக்கோப்பையைப் பார்த்தார்கள்.
இரண்டு முறையும் தென்னாப்பிரிக்க அணி ரன்களைத் துரத்தும்போதுதான் தோல்வி அடைந்துள்ளார்கள். நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 159 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. அதைப்போல மறுபுறம், ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பற்றி பேசினால், 177 ரன்களைத் துரத்தும்போது, தென்னாப்பிரிக்க அணி அதைக் கிட்டத்தட்ட அருகில் வந்து தவறவிட்டது. அதாவது தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.
துரத்திச் சென்று நெருங்கிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தான் அவர்களுடைய தீராத வலியாகவும் இருக்கிறது. தோல்விகள் இருந்தாலும், விரைவாக இந்த வேதனைகளிலிருந்து மீண்டு வெற்றிபெறும் நோக்கத்தோடு விளையாடவேண்டும் என ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.