பாலித்தீன் பையில் வெடிகுண்டு., பொறுப்பேற்றதா காலிஸ்தான்.? வெளியான பரபரப்பு தகவல்கள்…
டெல்லி சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று வெடித்த வெடிகுண்டு ஒரு பாலித்தீன் பையில் கட்டி ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் ஒரு நபர் வெள்ளை சட்டை அணிந்து சந்தேகத்திற்கு இடமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஒரு பாலித்தீன் பையில் வெடிகுண்டை சுற்றி அதனை ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் பதுக்கி வைத்து இருந்தது டெல்லி போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஓர் முக்கிய தகவலாக, இதுவரை அதிகாரபூர்வமாக எந்த சட்டவிரோத அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் ஒரு டெலிகிராம் இணையதள சேனலில் டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ பகிரப்பட்டதாகவும், அதில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகம் வாட்டர் மார்க்கில் இடம்பெற்றுள்ளது என்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.