பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக பெங்களூருவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் வெளுத்து வாங்கிவரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஒக்கலிபுரம், ரிச்மண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தும்.
இதனால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சனிக்கிழமை இரவு 8.30 மணி நிலவரப்படி, பெங்களூரு நகரில் 17.4 மிமீ மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் எச்ஏஎல் 12 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, பெங்களூரு நகரம், பெங்களூரு நகர்ப்புறம், சிக்கபள்ளாப்பூர் மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இன்று, நாளை, மற்றும் நாளைமறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.