பருவமழையில் முதல் புயல்.! ‘டானா’ பெயர் வந்தது ஏன்? எங்கே கரையை கடக்கும்?
அக்.23-ல் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை : மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றின் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.22-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, அக்.23-ல் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நடப்பு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இதுவாகும். இதற்கு கத்தார் பரிந்துரைத்த டாணா (DANA) என பெயரிடப்பட உள்ளது. அழகான, விலையுயர்ந்த முத்துக்காக அரபு மொழியில் கத்தார் முன்மொழிந்தபடி, இந்த புயலுக்கு டானா’ என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிற்கு பாதிப்பா
அக்.24ம் தேதி காலைக்குள் ஒடிசா – மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு இருக்கிறது. இது ஓடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது.
எங்கே கரையை கடக்கும்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஷா, மேற்குவங்கத்தை நோக்கி செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
அக்டோபர் 22 முதல் 24 வரை மத்திய வங்கக் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 24 முதல் 25 வரை வடக்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுரை
மீனவர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி வரை அந்தமான் கடலுக்கும், அக்டோபர் 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் மத்திய வங்காள விரிகுடாவிற்கும், அக்டோபர் 24 முதல் 25 ஆம் தேதி வரை வடக்கு வங்காள விரிகுடாவிற்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.