‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!
சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி ஐந்து வருடத்திற்கு வரும் போகும் விஜய்யின் ரசிகர் என்ற பதவி கடைசிக் காலம் வரை இருக்கும் என த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான வேலைகளில் கட்சியினரும், கட்சியின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநாடு தொடங்குவதை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. இதனைக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். இவர் வருகை தருவதை முன்னிட்டு கட்சி தொண்டர்கள்’நிரந்தர பொதுச்செயலாளர்’ என்று அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பல இடங்களில் பேனர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒரு பக்கம் எதிர்மறையான கேள்விகளை எழுவதற்குக் காரணமாக அமைந்தது என்றே கூறலாம். ‘நிரந்தர பொதுச்செயலாளர்’ புஸ்ஸி ஆனந்த் எனக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பேனர் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் எதற்காக இப்படிப் போட வேண்டும் எனவும்? த.வெ.க ‘நிரந்தர பொதுச்செயலாளர்’ அவர் தானா? எனவும் கேள்விகளை எழுப்பினார்கள்.
அந்த கேள்விகளைக் கவனித்த புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சி மேடையில் பேசி ‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம் குறித்துத் தெளிவான விளக்கமும் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும் போது எனக்குக் கொடுத்த வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளியே இருந்த பேனர்களில் நிரந்தர பொதுச்செயலாளர் எனத் தொண்டர்கள் போட்டிருந்தார்கள்.
கட்சியில் எனக்குப் பொதுச்செயலாளர் பதவியைத் தலைவர் விஜய் தான் கொடுத்தார். அது நிரந்தரமான பதவியா? இல்லையா? என்பதை விஜய் தான் முடிவு செய்யவேண்டும். ‘சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி ஐந்து வருடத்திற்கு வரும் போகும். ஆனால், விஜய்யின் ரசிகர் என்ற பதவி என்னுடன் கடைசிக் காலம் வரை இருக்கும்.
எனவே, அதனால் தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது ஒரு முகவரிதான். இது நிரந்தர பதவி இல்லை. எனவே, போஸ்டர்களில் எனது பெயருக்கு முன்னாள் பொதுச்செயலாளர் என்று மட்டுமே பதிவிடுங்கள். நிரந்தர பொதுச்செயலாளர் என போட வேண்டாம்” என தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் கட்டளையிட்டுள்ளார்.