SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வந்த 3 போட்டிகள் அடங்கியத் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த அக்-13 ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர் தொடங்கியது.
இலங்கை அணி கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டிஸ் அணியை இதுவரையில் ஒரு தொடரைக் கூட கைப்பற்றியது கிடையாது. இதனால், இந்த தொடரைக் கைப்பற்றினால் இலங்கை அணி ஒரு உலகக்கோப்பையைக் கைப்பற்றியதற்குச் சமம் என்றார் போலவே இந்த தொடரில் விளையாடக் களமிறங்கியது.
அதன்படி, அக்-13 அன்று தம்புல்லாவில் நடைபெற்ற முதல் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிப் பெற்றதுடன் தொடரிலும் 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற தொடரின் 2 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.
இந்த தொடரை வென்றதன் மூலம் இலங்கை அணி முதல் முறையாக கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை டி20 தொடரில் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இந்த டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இலங்கை அணியின் தொடக்க வீரரான பத்தும் நிஸ்ஸங்கா இந்த தொடரின் நாயகன் விருதைப் பெற்றார்.
அவர் இந்த தொடரில் 3 இன்னிங்ஸில் விளையாடி 104 ரன்கள் விளாசி இருக்கிறார். அதில், ஒரு அரை சதமும் அடங்கும். இலங்கை அணியின் இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வரும் அக்-20ம் தேதி அன்று இரு அணிகளுக்குமான 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரானது தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.