அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!
அகர்தலா-மும்பை எல்டிடி ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 3:55 மணிக்கு திபாலாங் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு ரயில் விபத்து ஏற்பட்டது ஏன செய்திகள் வெளிவந்தாலும் நம் மனதைப் பதற வைத்து வருகிறது. அந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
அசாமில் அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ரயில் விபத்து ஏற்பட்டது உடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், ரயில் விபத்து ஏற்பட்டது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது ” அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் விபத்தில் சிக்கியது உண்மை தான்.
ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்போது ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். மேலும், விபத்தைத் தொடர்ந்து லும்டிங்-பதர்பூர் ஒற்றைப் பாதைப் பிரிவில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.