முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் – வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு!
நவம்பர் 18ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்களாதேஷ் : கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18-ல் நேரில் ஆஜர்படுத்த வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைமறைவான முன்னாள் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 44 பேருக்கும் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT) தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் தான் பகிர்ந்துள்ளார். மேலும், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மாணவர் இயக்கத்தின் போது உயிரிழந்த பல மாணவர்களை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆம், இந்த ஆண்டு ஜூலை மாதம், பங்களாதேஷில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஒரு மாதமாக நீடித்த இந்த போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மாணவர்கள் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 5ம் தேதி பாதுகாப்பு காரணங்களுக்காக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.