தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு தொடக்கம்! 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
தூத்துக்குடியில் கயாக் மற்றும் ஸ்டாண்டிங் பெடலிங் என இரு பிரிவுக்கான கடல் சாகச விளையாட்டை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி : தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளைத் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கொடியசைத்துத் துவங்கி வைத்தனர். தேசிய கனாயிங் மற்றும் கயாக்கிங் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு கனாயிங் மற்றும் கயாகிங் அசோசியேஷன் சார்பாக நடைபெறும் இது 2-வது முறையான தேசிய அளவிலான கடல் நீர் சாகச விளையாட்டாகும்.
இந்த போட்டியில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்படப் பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையைக் காட்டி வருகின்றனர்.
கயாக் (துடுப்பு மூலம் கடலில் செல்வது) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (நின்றபடி துடுப்பைக் கொண்டு கடலில் செல்வது) என இரு பிரிவுகளில் 500 மீ. முதல் 5000 மீ. தூரம் வரையில் நடைபெற்றது. மேலும், இந்த போட்டிகள் அனைத்தும் சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் என்ற பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச அளவிலான கடல் சாகச போட்டிக்குத் தகுதிப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
இன்று தொடங்கிய இந்த போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், போட்டிகள் ஆரம்பித்த முதல் நாளான இன்று (17-10-1997), மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.