எம்.ஜி.ஆர் தொடங்கி., ஜெயலலிதா வழிநடத்திய அ.இ.அ.தி.மு.க கடந்து வந்த பாதை…,

1972 அக்டோபர் 17ஆம் தேதி எம்ஜிஆர் வழிநடத்த தொடங்கிய அதிமுக கட்சி, ஜெயலலிதா வசம் சென்று, பிறகு சசிகலா , ஓபிஎஸ், இபிஎஸ் என பல்வேறு தலைமையை ஏற்றுக்கொண்டு இன்று 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

MGR - Jayalalitha - Edappadi palanisamy

சென்னை : இன்றோடு (அக்டோபர் 17) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கி 52 ஆண்டுகள் nநிறைவு செய்து 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிலர் பிரிந்து இருக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகினர். சிலர் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இப்படியாக பல்வேறு கலகட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதிமுக எனும் கட்சி இன்றும் தமிழக அரசியலில் ஆளுமையுடன் நிலைத்து கொண்டிருக்கிறது.

திமுகவில் எம்.ஜி.ஆர் :

அதிமுக பற்றி கூற வேண்டுமென்றால் ஆளும் திமுக பற்றியும் இங்கு பதிவிட வேண்டும். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர்கள் முதலில் திமுகவில் தான் உறுப்பினராக செயல்பட்டு வந்தனர். ஏன், அதிமுக தலைவர் எம்ஜிஆரே முதலில் திமுக உறுப்பினர் தான். திமுக தமிழக அரசியலில் வேரூன்ற மிக தீவிரமாக செயலாற்றியவர் எம்ஜிஆர்.

1953ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தீவிரமாக ஈடுபட்ட வந்த எம்ஜிஆர் 1967இல் திமுக எம்எல்ஏவாக செயல்பட தொடங்கி, தனது சினிமாவில் திமுக கருத்துக்களை கூறியவர். அடுத்து 1969இல் அண்ணா மறைவு,  1971இல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் , சினிமாவில் இருந்த எம்ஜிஆருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படாதது, திமுக கணக்கு வழக்கை எம்ஜிஆர் பொதுவெளியில் கேட்டது என திமுகவுக்கும் எம்ஜிஆருக்குமான பிரச்சனை நீண்டது.

அதிமுகவில் எம்ஜிஆர் இணைந்தார் :

இறுதியில் 1972, அக்டோபர் 14இல் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் எம்ஜிஆர். அதற்கு அடுத்த நாளே அனகாபுரத்து ராமலிங்கம் பதிவு செய்து வைத்திருந்த அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.  1972, அக்டோபர் 17இல் எம்ஜிஆர் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமானது. 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் அதிமுகவுக்கு முதல் வெற்றியை கொடுத்தார்.

வெற்றி – தோல்வி :

எம்ஜிஆர் வழிநடத்திய அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் தோல்வி இல்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் வெற்றி தோல்வி மாறிமாறி கிடைத்தது.  1977 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து 36 இடங்களை வென்ற அதிமுக, 1980 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டது. அந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது

3 முறை முதலமைச்சர் :

ஆனால் ,  சட்டமன்றத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக தோல்வி கண்டதில்லை என்றே கூறலாம். 1977 சட்டமன்ற தேர்தல், 1980 சட்டமன்ற தேர்தல், 1984 சட்டமன்ற தேர்தல் என சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியது அதிமுக. 3 முறை தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்.ஜி.ஆர். 3 முறை முதலமைச்சராக எம்ஜிஆர் பொறுப்பேற்ற காலத்தில் தான் ஜெயலலிதா அதிமுக கட்சிக்குள் சேர்ந்து கொள்கை பரப்பு செயலாளராக தீவிரமாக செயலாற்றினார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு…

1987 டிசம்பர் 24இல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா பிரிவு ,  எம்ஜிஆர் மனைவி ஜானகி பிரிவு என 2 பிரிவு அதிமுகவில் உருவானது. அதற்கு பிறகான தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் ஜெயலலிதா அணி ஜானகி அணியை விட அதிக தொகுதிகள் பெற்றது . பின்னர் ஜானகி கட்சியில் இருந்து விலக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக மாறினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தலைமையில்..,

1991 ஜூன் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 164 தொகுதிகளை வென்று முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக மாறினார் ஜெயலலிதா. முதலமைச்சராக மாறிய பிறகு சொத்துகுவிப்பு வழக்கு ,  டான்சி வழக்கு என ஏற்ற இறக்கங்களை சந்தித்தது போல அதிமுகவும்,  1996இல் தோல்வி, 2001இல் மீண்டும் வெற்றி, 2006இல் தோல்வி என மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்தது.

ஜெயலலிதா சிறை செல்லும் சமயங்களில் 2 முறை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.  2001 மற்றும் 2014 காலகட்டங்களில் அமரவைக்கப்பட்டவர் ,  பின்னாளில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் சில நாட்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

ஜெயலலிதா மறைவு :

2011, 2016 என இரு தேர்தல்களிலும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியை தொடர்ந்த அதிமுக, இந்த முறை நீண்ட நாட்கள் ஆட்சி செய்யவில்லை. 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அதன் பிறகு தமிழக அரசியலில் அதிமுகவுக்கு இறங்கு முகமாகவே அமைந்து வருகிறது.

இபிஎஸ் – ஓபிஎஸ் :

ஓபிஎஸ் முதலமைச்சரானார், சசிகலா பொதுச்செயலாளராக மாறினார். ஓபிஎஸ் தர்மயுத்தம், ஓபிஎஸ் ராஜினாமா , கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் என பல்வேறு அரசியல் களோபரங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சராக மாறினார் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்த ஓபிஎஸ் – இபிஎஸ் மீண்டும் பிரிந்தனர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.

இறங்கு முகத்தில் அதிமுக :

எடப்பாடி பழனிச்சாமி சாமி தலைமையில் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் , ஈரோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என தோல்வியையே கண்டு வருகிறது அதிமுக. இதற்கிடையில் கட்சியில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழு ஒன்றை ஆரம்பித்தார். ஓபிஎஸ் – இபிஎஸ் – சசிகலா ஒன்று சேரவேண்டும் என இன்னொரு பிரிவினர் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற அமைப்பை ஆரம்பித்தனர். இதற்கிடையில் சசிகலா சிறைக்கு சென்று திரும்பியது, சசிகலா உறவினரும் அதிமுகவில் முக்கிய நபராகவும் இருந்த டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு :

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டு அதன் வாக்கு வாங்கி சரிந்து இருந்தாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனும் ஆளுமை அதிமுக மூலம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அதிமுகவை நீர்த்துப்போகாமல் வைத்துள்ளது. அதனை பயன்படுத்தி தற்போதுள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கட்சி நலன் சார்ந்து முடிவு செய்து செயல்படுத்தினால் அதிமுக மீண்டும் எழுச்சி பெற்று தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என காத்திருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்