இன்று கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்! 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புதுச்சேரி மற்றும் நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று முன்தினம் வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிகை விடுக்கப்பட்டது.
ஆனால், காற்று வீசும் திசை போன்றவற்றால் தெற்கு ஆந்திர பகுதிகளில் புதுச்சேரி நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னையிலும் கனமழை குறைந்து நேற்று காலை முதல் லேசான மழைப் பொழிவு இருந்தது.
மேலும், ஒரு சில இடங்களில் மழையும் இல்லாததால் விடுக்கப்பட்ட ‘ரெட் அலெர்ட்’ கூட நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக இன்று அதிகாலை தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, சென்னைக்கு 80 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
இதனால், இன்று காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வடக்கே கரையைக் கடந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, ‘சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்’ என நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியிருந்தார்.