சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!
வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில், தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 138 மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 71 மில்லி மீட்டர். எனவே இயல்பை விட இது 96 சதவீதம் அதிகம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்குக் கிழக்கு தென்கிழக்கு சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்குக் கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.
எனவே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவில்லை என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. ரெட் அலர்ட் என்றால் அனைத்து இடங்களிலும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என கருதக்கூடாது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. எனவே, தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டள்ளது.
நாளை காலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்பு மழைக்கு மட்டுமே சிவப்பு நிற எச்சரிக்கை கிடையாது என்றும், அதன் விளைவுகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனவும் தகவலை தெரிவித்தார்.