சென்னை கனமழை: சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு இல்லை – கே.என்.நேரு.!

சென்னையில் பெய்த கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

KNNehru

சென்னை : வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்னை மாநகராட்சி மேயர் கள பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்தித்து இதுவரை நடந்த பணிகளை பற்றி  எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “கனமழை அறிவிப்பு வெளியானதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் அனைவரும் கள பணியில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. ஆனாலும், மழைநீர் வடிகால்கள் பணிகள் காரணமாகவே 4 மணி நேரத்தில் நீர் வடிந்தது.

ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுபோல், சென்னையில் பெய்த கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த முறை பாதிப்பை ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகளில் இம்முறை பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மழைநீர் வடிகால் திமுக ஆட்சியில் தான் சிறப்பாக அமைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்றாண்டுகளில் 1135 கி.மீ கட்ட திட்டமிட்டு, தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அது மட்டும் இல்லாமல், இரண்டாம் கட்டமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், இன்றைய தினம் 398 அம்மா உணவகங்களில் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளன” என்று  கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்