அரை இறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து மகளிர் அணி! 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!
இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றதால், இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் தொடரிலிருந்து வெளியேறியது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 தொடரில் இன்றைய 19-வது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீராங்கனைகள் நல்லதொரு தொடக்கத்தை நியூசிலாந்து அணிக்கு அமைத்தனர்.
மேலும் சீரான இடைவெளியிலேயே நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால், நியூசிலாந்து அணியால் பெரிய ஸ்கோர் இல்லை என்றாலும் நல்லதொரு ஸ்கோரை ஸ்கோர் போர்டில் பதிவு செய்ய முடிந்தது. இதன் காரணமாக, இறுதியில் 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து மகளிர் அணி 110 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சுசி பேட்ஸ் 28 ரன்களும், அதிரடி வீராங்கனையான புரூக் ஹாலிடே 22 ரன்களும், ஜார்ஜியா ப்ளிம்மர் 17 ரன்களும், அணியின் கேப்டனான சோஃபி டெவின் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல பாகிஸ்தான் மகளிர் அணியில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதன் பிறகு, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் களமிறங்கியது பாகிஸ்தான் மகளிர் அணி. அதன்படி, பேட்டிங்கில் படுமோசமாக பாகிஸ்தான் அணி விளையாடியது. அதன்படி, தொடக்க வீராங்கனையான முனீபா அலி மட்டும் 15 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து எந்த வீராங்கனையும் 10 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும் அணியின் கேப்டனான பாத்திமா சனா மட்டும் அவரது பங்கிற்கு 21 ரன்களை சேர்த்தார். ஆனால், அது பாகிஸ்தான் மகளிர் அணிக்கு கைகொடுக்கவில்லை. இறுதியில், களமிறங்கிய 2 பேட்ஸ்மேன்களும் ஒரு ரன்களைக் கூட எடுக்காமல் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.
மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் 56 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு அந்த அளவிற்கு வலுவான ஒரு ஆதிக்கத்தை செலுத்தியது. இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நியூஸிலாந்து மகளிர் அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூஸிலாந்து மகளிர் அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும், காத்திருந்த இந்திய மகளிர் அணியும் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.