பாரம்பரியமிக்க செட்டிநாடு ஸ்டைல் அதிரசம் செய்முறை ரகசியங்கள் இதோ..!
பாரம்பரிய மிக்க அதிரசம் உடையாமல் வர எப்படி செய்வது என இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
சென்னை – தீபாவளி என்றாலே அதிரசம் இல்லாமல் எப்படிங்க.. அதுதானே நம் பாரம்பரிய பலகாரம். புதிது புதிதாக எத்தனை வகை ஸ்வீட்கள் வந்தாலும் அதிரசத்திற்கு இணையாகாது..அவ்வளவு பாரம்பரிய மிக்க அதிரசம் உடையாமல் வர எப்படி செய்வது என இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி= ஒரு கிலோ
- வெல்லம் =முக்கால் கிலோ
- ஏலக்காய்= இரண்டு ஸ்பூன்
- நல்லெண்ணெய் =நான்கு ஸ்பூன்
- கடலை எண்ணெய்= பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை;
பச்சரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள் .அரிசியை கையில் பிடித்தால் ஒட்ட வேண்டும். அந்த அளவுக்கு ஈரம் இருக்க வேண்டும். அரிசி உலர்ந்த பிறகு அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த மாவை சலித்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதை அமுத்தி வைத்துக் கொள்ளவும்.இப்போது வெல்ல பாகு தயார் செய்து கொள்ளவும். அதிரசத்திற்கு பாகுபதம் மிகச் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிரசம் பெர்பெக்ட்டாக வரும். எடுத்து வைத்துள்ள வெல்லத்தை 100 எம்எல் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் .பிறகு ஒரு சிறிய கப்பில் தண்ணீர் ஊற்றி அதில் பாகுபதத்தை சரி பார்த்துக் கொள்ளவும். அதாவது வெல்ல கரைசலை தண்ணீரில் விடும்போது அது கரையாமல் கையில் எடுத்து உருட்ட வரவேண்டும் இதுவே சரியான பாகுபதம் ஆகும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு தயார் செய்து வைத்துள்ள மாவை உதிர்த்துவிட்டு வெல்ல பாகுவில் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும். பிறகு அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி மூடி இரண்டு நாட்களுக்கு வைத்து விட வேண்டும். நல்லெண்ணெய் சேர்க்கும் போது மாவின் மேல்பகுதி காயாமல் இருக்கும். இரண்டு நாள் கழித்து அந்த மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி பிறகு அதை வாழை இலையில் எண்ணெய் தடவி தட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மாவை சேர்த்து இரண்டு புறமும் பொன்னிறமாக பொறித்தெடுத்தால் அதிரசம் தயாராகிவிடும்.
குறிப்பு;
இரண்டு நாட்கள் கழித்தும் அதிரச மாவு திக்காகாமல் இருந்தால் அதில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து பிசைந்து பிறகு அதிரசம் செய்யலாம். அல்லது மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் லேசாக சுடு தண்ணீர் தெளித்து பிசைந்து கொண்டு பிறகு அதிரசம் தயார் செய்யலாம் .அதிரசத்தை பொருத்தவரை பாகுபதம் சரியாக இருக்க வேண்டும் .அப்போதுதான் அதிரசம் உடையாமலும் கடினமாகாமலும் பெர்பெக்ட்டான பதத்தில் இருக்கும்.