பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது – எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் பேட்டி!

தமிழகத்தில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

K.K.S.S.R.Ramachandran

சென்னை : தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சிலப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை பெய்யத் தொடங்கினாலே சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை நீர் பாதிப்பென்பது தொடரும் கதையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆட்சியைப் போல இந்த முறை அது போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற ரயில் விபத்துக்கு எடுத்த முன்னேற்பாடுகளைப் போல பருவமழைக்கும் முன்னெச்சிரிக்கையாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என ராமசந்திரன் கூறியிருக்கிறார்.

இன்று சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பட்டு மையத்தில் பத்திரிகையாளர் சந்தித்து அமைச்சர் ராமசந்திரன் பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நம் அரசு தயாராக இருக்கிறது. இந்த பருவ மழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய அத்தனை விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

இதே போல திருச்சியில் ஏர் இந்தியா விமான பிரச்சினை வந்த போது கூட நம் முதலமைச்சருடைய ஆணைக்கிணங்க நம்முடைய துறையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மத்தியில் சொல்லி 18 ஆம்புலன்ஸ்கள், 3 ஃபயர் சர்வீஸ் வண்டிகளையும் ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.

அதே போல நேற்று நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக 10 இடங்களில் கல்யாண மண்டபங்களை தயார் செய்தோம். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டது என்று சொன்னால் அவர்களை தங்க வைப்பதற்கு வேண்டிய வேலைகளையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருக்கிறோம்.

மேலும், முதலமைச்சரின் உத்தரவுபடி 20 பேருந்துகளையும் தயாராக வைத்து அவர்களை ஊருக்கு அனுப்புவதற்கு வேண்டிய பணிகளையும் செய்திருக்கிறோம். அதே போல அடுத்ததாக வரவுள்ள வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது. பருவமழைக்கும் முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கு வேண்டிய பால் பவுடர் போன்றவற்றை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஸ்டாக் செய்து வைப்பதற்கான வேலைகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பரவலாக மழை பெய்தால் சமாளிக்கலாம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம். மேலும், இது  தொடர்பாக வானிலை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்”, என அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்