வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்! இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேச்சு!
இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
துபாய் : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது .
இந்த போட்டியில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மகிழ்ச்சியாக தன்னுடைய அணியினரைப் பாராட்டிப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். குறிப்பாக எங்களை நாங்கள் சிறப்பாகச் செயல்படுத்திக்கொண்டோம் என்று சொன்னால் பீல்டிங்கில் சொல்வோம்.
பீல்டிங் சரியாக இருந்த காரணத்தால் விக்கெட்கள் எடுக்க முடிந்தது. இதனால் வெற்றியும் கிடைத்தது. அந்த அளவுக்கு எங்களுடைய அணி வீராங்கனைகள் சிறப்பாக பீல்டிங் செய்தார்கள். இந்த நேரத்தில், அவர்களை நான் பாராட்டுகிறேன். இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய அணி வீராங்கனைகள் ஒன்றாக இணைந்து பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டும் தான் வெற்றிபெற முடியும். எனவே தெளிவாக விளையாடவேண்டும் என்று முடிவெடுத்தோம்.
அப்படித் திட்டமிட்டபடி நாங்கள் சரியாக விளையாடி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரும் போட்டிகளில் அப்படி விளையாடுவோம்” எனவும் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய பேட்டிங் பற்றியும் மனம் திறந்து பேசினார்.
இது குறித்துப் பேசிய அவர் ” நான் இன்னும் கொஞ்ச நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்பட்டேன். களத்திற்குள் வருவதற்கு முன்பே விக்கெட் கொடுத்துவிடக் கூடாது. அருமையாக விளையாடி ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தேன். எனக்கு இந்த போட்டியில் நன்றாகப் பந்து பேட்டிற்கு வந்த காரணத்தால் எனக்கு விருப்படியான ஷாட்களை ஆட முடிந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது” எனவும் நெகிழ்ச்சியாக ஹர்மன்பிரீத் தெரிவித்தார்.