அடிக்கடி கேக் சாப்பிடுறீங்களா? தயவு செஞ்சு இதை தெரிஞ்சுக்கோங்க.!
பர்த் டே முதல் அனைத்து கொண்டாட்டங்களையும் கேக் வெட்டி செலிப்ரேட் செய்யும் கலாச்சாரத்திற்குள் சென்றிருக்கும் நமக்கு, அதற்கு பின்னால் இருக்கும் விளைவுகள் தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பர்த் டே முதல் அனைத்து கொண்டாட்டங்களையும் கேக் வெட்டி செலிப்ரேட் செய்யும் கலாச்சாரத்திற்குள் சென்றிருக்கும் நமக்கு, அதற்கு பின்னால் இருக்கும் விளைவுகள் தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை: பிளாக் ஃபோரெஸ்ட், ரெட் வெல்வட், சாக்லெட், ப்ளூ பெரி அடடா.. எத்தனை வகையான கேக். கண்கவர் வண்ணங்கள், புது புது டிசைன்கள் என மனதை அள்ளும் கேக் வகைகள். குழந்தைகள் மனதை கவரும் ஸ்பைடர் மேன் கேக், டோரா புஜ்ஜி கேக் என அடுக்கிக்கொண்டே போகலாம். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என சும்மாவா சொன்னார்கள். அத்தனையும் வியாபார நோக்கமாக மாறி இருக்கும் இந்த காலகட்டத்தில், கண்களை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்யும் யுக்திகள் அதிகரித்துள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று கேக் வகைகள். இவற்றில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
கேக் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ;
அதிகமான அளவு கேக்-ஐ உணவாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் பருமனை ஏற்படுத்தும். சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை கேக்கில் அதிகமாக இருப்பதால் அவை ரத்தத்தில் சேரும்போது எளிதில் சர்க்கரை நோய் வர செய்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கேக்கில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு, கிருமிகளை எதிர்த்து போராடும் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அழித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், 100 கிராம் கேக் சாப்பிட்டால் ஐந்து மணி நேரம் ரத்த வெள்ளை அணுக்களின் திறன் குறைந்து இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.
கடந்த 2007இல் தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி கேக்குகளில் உள்ள கொழுப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 2008-இல் மேற்கொண்ட ஆய்வின் படி கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால் நினைவாற்றல் குறைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, சமீபத்திய நாட்களில் சுவைகளை தாண்டி, கண்களை கவரும் அதிக வண்ணமயமான கேக்குகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் செரிமான தொந்தரவு மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்துகின்றது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதம் சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததின் படி அதில் 12 கேக் வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புள்ளது என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது .
குறிப்பாக நம்மில் பலருக்கும் பிடித்த கேக்கான ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகளில் அதிக அளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்படுவதாகவும் இதுவே அதிக அளவு விற்பனை செய்யப்படும் கேக்குகளாகவும் கூறப்படுகிறது . அதனால் கண்களை கவரும் அதிக வண்ண மையத்துடன் இருக்கும் கேக் வகைகளை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கின்றது. மேலும் சமீபத்தில் பெங்களூரில் கேக் சாப்பிட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்து விட்டதாக செய்திகளும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.