கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.! சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு.!
சென்னை : பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி (Presidency College Chennai) மாணவர் சுந்தர் என்பவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிவிட்டது. தகவலறிந்து வந்த பெரியமேடு காவல்துறையினர் மாணவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு பதியப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை விசாரணையில் ரூட்டு தல விவகாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதனை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநில கல்லூரி, கல்லூரிக்கு வரும் மின்சார ரயில் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சேர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிக்கும் மாணவர்களின் கல்லூரி அடையாள அட்டைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாணவர் சுந்தர் உயிரிழந்ததை அடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சுந்தர் தாக்கப்பட்டதாக பதியப்பட்ட வழக்கை, பெரியமேடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.