70-வது தேசிய விருது விழா : ஏ.ஆர்.ரஹ்மான் முதல் நித்யா மேனன் வரை..விருது பெற்ற பிரபலங்கள்!
தேசிய விருது வழங்கும் விழா நடந்து வரும் நிலையில், ரிஷப் ஷெட்டி, நித்யா மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
டெல்லி : சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய கையால் விருதுகளை வழங்கி வருகிறார்.
ஏற்கனவே, யாருக்கெல்லாம் விருது வழங்கப்படும் என்பதற்கான விவரம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விழாவிற்கு விருது வென்ற பிரபலங்கள் நேரடியாக வருகை தந்து விருதுகளை பெற்று சென்றார்கள்.
இந்நிலையில், யாரெல்லாம் விருதுவிழாவில் கலந்துகொண்டு விருதுகளை வாங்கிச்சென்றார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான்
- பொன்னியின் செல்வன் திரைபடத்தின் முதல் பாகத்தில் சிறந்த பின்னணி இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
மணிரத்னம்
- சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக தேசிய விருதை தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்கள்.
நித்யா மேனன்
- திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை நித்யா மேனன் பெற்றுக்கொண்டார்.
சதீஷ்
- திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்காக நடன இயக்குநர் சதீஷ்க்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அன்பறிவு
- கேஜிஎப் 2 படத்தில் பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை வைத்து நம்மளை கவர்ந்த இரட்டையர்கள் அன்பறிவுக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
ப்ரீதம் சக்ரவர்த்தி
- ‘பிரம்மாஸ்திரா-பாகம் 1: படத்தில் சிறப்பான இசையை கொடுத்திருந்த இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்திக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
ரிஷப் ஷெட்டி
- கந்தாரா திரைப்படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் பவன் ராஜ் மல்ஹோத்ரா, ‘ஃபௌஜா’ படத்திற்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து ‘சிறந்த துணை நடிகருக்கான’ விருதை பெற்றார். அதைப்போல, ‘கே.ஜி.எஃப்2 ‘சிறந்த கன்னட படத்துக்கான’ தேசிய விருது தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.