விமானப்படை சாகச நிகழ்ச்சி : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM MK Stalin say about Air Show tragedy

சென்னை : இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் வந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை 7 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானப்படை வான்வெளி சாக நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், முன்னெச்சரிக்கை வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன், அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதளையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்