மழை வரபோகுதே! இந்த 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!!
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் லேசான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.
குறிப்பாக, கடலூர், சிவகங்கை, நாமக்கல், சேலம், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் தினம் தினம் வானிலை தொடர்பான செய்திகளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது.
அந்த வகையில், இன்று 15 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அலர் கொடுத்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதே சமயம், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரையில். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இதன் காரணமாக, மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.