நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் .
நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு ;
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில் கூஷ்மாண்டா துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும்.
இன்றைய தினத்தில் கொலு வைத்திருந்தால் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜை செய்ய வேண்டும். கொலு வைக்காதவர்கள் ஒரு வேளையாவது பூஜை செய்வது சிறப்பாக கூறப்படுகிறது. மேலும் சுமங்கலி பெண்களை மூன்று, ஐந்து, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அழைக்கலாம்.
பூஜை செய்ய உகந்த நேரம்;
நவராத்திரியின் நான்காம் நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை செய்வது 100% பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் காலை 7 ;45 லிருந்து 8 ;45 வரையிலும், காலை 10:45 லிருந்து 11; 45 வரையிலும், மாலை 5;30-10;30 வரையிலும் பூஜைகளை செய்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
நெய்வேத்தியம்-அவள் கேசரி, பாசிப்பயிறு, பட்டாணி சுண்டல், கதம்ப சாதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம்.
பூஜைக்கு உகந்த மலர்- ஜாதி மல்லி.
அர்ச்சனை செய்ய உகந்த மலர் -நெல்லி இலை.
நிறம்- கருநீலம்.
பழம் -கொய்யாப்பழம் .
கோலம்- படிக்கட்டு வகை மாக்கோலம் போட வேண்டும்.
மேலும் பூஜைக்கு உரிய பொருள்களை வைத்து தீப தூப ஆராதனைகளை செய்ய வேண்டும் .மகாலட்சுமிக்கு உரிய காயத்திரி மந்திரம் மற்றும் 108 போற்றிகளை கூறி வழிபடலாம். இன்றைய நாளில் நீங்கள் உடுத்தும் உடை மற்றும் மகாலட்சுமியின் உடை கருநீல நிறத்தில் இருப்பது சிறப்பாக கூறப்படுகிறது.
பலன்கள்;
நவராத்திரி பூஜையை மேற்கொண்டாலே வாழ்வில் சகல சம்பத்தும் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது . குறிப்பாக நவராத்திரியின் நான்காம் நாள் மகாலட்சுமியை வழிபடுவதால் கடன் பிரச்சனை அகலும். பண நெருக்கடி விலகும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மேலும் இன்றைய தினம் அன்னதானம் செய்வது கூடுதல் பலன்களை பெற்றுத் தரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நவராத்திரி காலத்தில் உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வைத்து அம்பிகையை மனம் உருகி வேண்டி உங்கள் வேண்டுதல்களை வைத்தாலே அவளின் பரிபூரண அருள் கிடைத்துவிடும்.