விறுவிறு வாக்குப்பதிவு., ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம் இதோ.,
ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு , காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வழக்கம் போல இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
இந்த தேர்தலில், 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் அதில் , 5 லட்சத்து 24 ஆயிரத்து 514 வாக்காளர்கள் முதன் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஆவார். 1031 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் அதில் 101 பெண் வேட்பாளர்கள் ஆவார்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 30,000 காவல்துறையினரும், 225 துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஹரியானாவில் கடந்த 2 தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து ஆட்சியை கைபற்றியுள்ளது. 2 முறையும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றி அதீத முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 3வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சியை பிடிக்குமா.? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி தெரியவரும். ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளும் அதே தினத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.