‘இஸ்ரேலை வீழ்த்துவோம்’ … ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி எச்சரிக்கை!
தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம் என ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கர்பல்லாவில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
கர்பல்லா : 1 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கூறியுள்ளார்.
கடந்த செப்-27ம் தேதி இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதனையடுத்து, இன்று அவருக்கு மத்திய பெய்ரூட்டில் உள்ள கர்பல்லாவில் அடையாள இறுதிச் சடங்குகான கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவிடம் இஸ்ரேல் ஒருபோதும் வெற்றி பெறாது என வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் நியாயமானது.
இஸ்ரேல் மீது நாம் நடத்திய தாக்குதல் சிறிய தண்டனை தான். இன்னும், தேவைபட்டால் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம். தேவைப்பட்டால் இஸ்ரேலை அழிப்போம். அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். கண்டிப்பாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவிடம் இஸ்ரேல் ஒருபோதும் வெற்றி பெறாது. பிராந்தியத்தின் அனைத்து நிலங்களையும் வளங்களையும் கைப்பற்ற அமெரிக்காவிற்கு இஸ்ரேல் ஒரு கருவி மட்டுமே தான்.
பாலஸ்தீனம், லெபனான் ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளின் எதிரி ஈரானுக்கும் எதிரி தான், இஸ்லாமிய தேசத்தின் எதிரி ஒன்றுதான், அதன் வழிமுறைகள் மட்டும் தான் ஒரு நாட்டிற்கு, மற்றொரு நாட்டிற்கு வேறுபடுகின்றன.
திமிர்பிடித்த மற்றும் கொடுங்கோலர்களின் கொள்கை முஸ்லிம்களிடையே பிளவு மற்றும் முரண்பாடுகளை விதைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த போரில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் இஸ்ரேல் கண்டிப்பாக தோல்வி தான் அடைவார்கள்” எனவும் அலி காமேனி பேசியுள்ளார்.