‘சனாதன ஒழிப்பு’ எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண்.! உதயநிதி கொடுத்த ‘நச்’ பதில்.!

சனாதானத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என பவன் கல்யாண் கூறியதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், lets wait and see என பதில் அளித்துள்ளார்.

Andhra Deputy CM Pawan Kalyan - Tamilnadu Deputy CM Udhayanidhi stalin

சென்னை : திருப்பதி லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் புகழுக்கு களங்கம் விளைவைக்கப்பட்டது எனக்கூறி 11 நாட்கள் விரதத்தை கடந்த மாதம் துவங்கினார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண். நேற்று இந்த விரதத்தை அவர் முடித்துக் கொண்டார். அப்போது திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பவன் கல்யாண் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ” இங்கு நிறைய தமிழ் மக்கள் இருக்கிறீர்கள். அதனால் நான் தமிழில் பேசுகிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் போன்றது, அதனை அழிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் (உதயநிதி) சொல்லியிருக்கிறார். இதனை யார் சொல்லி இருந்தாலும் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. அதனை அழிக்க முயன்றால் ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன் நீங்கள் தான் அழிந்து போவீர்கள். உங்களைப்போல நிறைய நபர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், சனாதனம் அப்படியேதான் இருக்கிறது.

சனாதானத்தின் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு யாரும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்கப்படாவிட்டாலும், அது தவறுதான். மதச்சார்பின்மை என்பது ஒருவழிப் பாதை அல்ல. அது இருவழிப்பாதை. இங்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும். ” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு பவன் கல்யாண் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கள் குறித்து இன்று செய்தியாளர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயநிதி, “lets wait and see” என ஆங்கிலத்தில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறிவிட்டு சென்றார்.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நிகழ்வில் பங்குபெற்ற உதயநிதி ஸ்டாலின்,  ” டெங்கு, மலேரியா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று ” என்று குறிப்பிட்டார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. வழக்குகளும் பதியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்