ஐசிசி தொடரில் முதல் முறை! ஐபிஎல்லை தொடர்ந்து சர்வதேச போட்டியிலும் களமிறங்கும் தொழில்நுட்பம்!
ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் வசதியை மகளீருக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஐசிசி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஒரே மைதானமான ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 2-வது போட்டியாகப் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் இரவு 7.30 மணிக்கும் மோதுகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு மகளிர் உலகக்கோப்பை தொடரில் ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். போட்டியில் மிகவும் முக்கியமான விஷயமாக, அதாவது மிகவும் நுணுக்கமாகப் பார்க்கப்படுவதில் டிஆர்எஸ் சிஸ்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. ஏனென்றால், நடுவர் அவுட் கொடுத்தாலும், வேகமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடிவு கொடுத்தது சரிதானா? என டி.ஆர்.எஸ் எடுப்பார்கள்.
அதிலும் சில சமயங்களில் குளறுபடி ஏற்படுவதும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது. குறிப்பாக கேமராக்கள் குறைவாக இருந்ததால் சில அங்கிள்களை பார்க்க முடியாமலும், இதனால் காலதாமதம் ஆனதும் ஐசிசி நடத்தை பற்றிய கேள்விகளை எழுப்பக் காரணமாக அமைந்தது. எனவே, இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஒரு மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வந்தது.
அதாவது, ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் என்ற பெயரில் இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்தும் வசதியைக் கொண்டு வந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட டிஆர்எஸ் எடுக்கும்போது கால தாமதம் இல்லாமல் வேகமாக ரிவியூ செய்யப்பட்டது பார்த்திருப்போம்.
அதே ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் வசதியை மகளீருக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகளில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகப் பயன்படுத்தும் தொடராக இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து நடைபெறும் ஐசிசியின் பெரிய தொடர்களில் இதனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பேசப்படுகிறது.