“இரான் பெரிய தவறை செய்துவிட்டது …பதில் கொடுத்தே ஆக வேண்டும்”! இஸ்ரேல் பிரதமர் கண்டனம்!
இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனான் : கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமான் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இணைந்து இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அரசு அறிவித்தது.
இப்படி இருக்கையில், நேற்று இரவு இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் மற்றும் இதர நகரங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. ஈரான் நாட்டின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானது.
இதனால், இஸ்ரேலில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டனர். மேலும், இந்த திடீர் தாக்குதல் உலகம் முழுவதும் போர் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், “ஈரான் இன்றிரவு பெரிய தவறைச் செய்து இருக்கிறது. அதற்கான விலை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. காஸா, லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட பாடத்தை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும்.
எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டது”, என இஸ்ரேல் பிரதமர் நெதென்யாகு தெரிவித்துள்ளார்.