இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹிஸ்புல்லா.! புதிய தலைவர் விரைவில் நியமனம்.?
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று அந்த அமைப்பின் துணைத் தலைவர் நைம் காசம் தொலைக்காட்சி வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான சயீத் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகள் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேலுக்கு சற்று அதிர்ச்சி தரும் செய்தியாக, ” விரைவில் ஹிஸ்புல்லா புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.” என அந்த அமைப்பின் துணை தலைவர் அறிவித்துள்ளார்.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது . அதனை உறுதிபடுத்தும் விதமாக தற்போது ஹிஸ்புல்லா துணை தலைவர் ஓர் தொலைக்காட்சி பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ” ஹிஸ்புல்லா தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குப் பிறகு எங்கள் அமைப்பின் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.” என்று துணைத்தலைவர் நைம் காசம் அறிவித்தார். மேலும், ” ஹிஸ்புல்லாவின் போராளிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறோம். இதற்கு பதிலாக எந்தவொரு இஸ்ரேலிய தரைவழி தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றும் காசிம் கூறினார்.
அடுத்ததாக, “நாங்கள் இவ்வாறு செய்வதால், போர் நீண்டு கொண்டு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், கடந்த 2006இல், இஸ்ரேலை எதிரமைப்பு வென்றது போல் நாங்களும் வெல்வோம். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர்கள் தற்போது பொறுமை காக்க வேண்டும். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டால் அடுத்த தலைவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் எங்கள் போராட்டம் தொடரும்.
இஸ்ரேல் ராணுவத்தால் எங்கள் இராணுவ தளவாடங்களை கண்டறிய முடியவில்லை. அதனை ஒருபோதும் அவர்களால் அடைய முடியாது. ” என்றும் நைம் காசம் கூறினார். ” இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது என்றும் காசம் அந்த தொலைக்காட்சி வீடியோவில் குற்றம் சாட்டினார்.