கடும் வீழ்ச்சி கண்ட இந்திய பங்குச்சந்தை! இன்று எழுச்சி பெறுமா?
கடந்த 2 நாட்களாக இந்திய பங்குசந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் வீழ்ச்சி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நடந்த வர்த்தக நாளில் மிகவும் சரிந்தே வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் முடிந்தது. ஆனால், அப்போது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நேற்று) வீழ்ச்சியையும் சேர்த்து உச்சம் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. மேலும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்ததன. இந்திய பங்குசந்தைகளான, நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்தது மற்றும் சென்செக்ஸ் 1272 புள்ளிகளாகவும் குறைந்தது.
இங்கு மட்டுமல்லாது உலக அளவில் சந்தையில் ஏற்றம் இறக்கம் என கலவையாகவே இருந்தது. இந்நிலையில், சரிவுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை மீளமுடியாமல் நேற்றைய நாள் முழுவதும் தவித்தது. மேலும், கடந்த வாரம் சில நாள்களாக எழுச்சி பெற்றிருந்த சந்தையில் லாபத்தைப் பதிவு செய்வதில் மட்டுமே முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி இருக்கின்றனர்.
அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றதும் சந்தைக்கு இப்படி பாதகமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. மேலும், நேற்று மட்டுமே முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி NSE IX -ல் GIFT நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து 26,003.50 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இன்றைய பங்குச் சந்தை சற்று சீரான தொடக்கத்திற்குச் செல்லும் எனவும், சிறுதளவு ஏற்றம் காணும் எனவும் கூறுகிறார்கள்.