அப்பா சட்டையை போட்டு பார்க்கும் உதயநிதி? இளைஞரணி முதல் துணை முதல்வர் வரை …கடந்து வந்த பொறுப்புகள்!!
மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தங்கள் வாழ்வில் எந்தெந்த வயதில் என்னென்ன பொறுப்புகளை ஏற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் துணை முதல்வர் என்ற பெருமையைக் கொண்டவர் தான் மு.க.ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் ஓ.பன்னேர்செல்வம் தமிழகத்தின் 2-வது துணை முதல்வராக பதவியேற்றார்.
இப்படி இருக்கையில், தமிழகத்தின் அடுத்த துணை முதலவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நேற்று அதற்கான பதிலும் கிடைத்தது. அதன்படி, தமிழகத்தின் 3-வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், அவருக்கு அரசியல் மற்றும் திரை வட்டாரங்களிலிருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இப்படி இருக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் அரசியல் பயணத்தை எந்த வயதில் துவங்கினார். அதன் பிறகு எப்போது துணை முதலமைச்சரானார், என்பதையும் அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை எப்போது துவங்கினார். எப்போது துணை முதல்வர் பொறுப்பை பெற்றார் என்பதை குறித்து பார்ப்போம்.
மு.க.ஸ்டாலின் :
தமிழக முதலைவரான மு.க.ஸ்டாலின் தனது 14-வது வயதில், அவரது தந்தை கலைஞர் கருணாநிதியை போலவே அரசியலில் கால்பதித்தார். 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் இருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து ‘கோபாலபுரம் திமுக இளைஞர் அணி’ என ஒன்றை துவங்கினார். அதன்பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபட்ட ஸ்டாலின், ‘எமர்ஜன்ஸி’ போன்ற முக்கிய நிகழ்வுகளில் இடம் பெற்றார்.
தொடர்ந்து அரசியல் களத்தில் ஈடுபட்டு வந்த மு.க.ஸ்டாலின் தனது 30-வது வயதில் அதாவது 1983-ம் ஆண்டு இளைஞரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின், 1984-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியைக் கண்டார்.
அதன் பிறகு 1989-ல் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதனால் தனது 36-வது வயதிலே அவர் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார். அதன் பிறகு 2006-ல் திமுக ஆட்சி அமைத்த போது உள்ளாட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், அங்கிருந்து 3 வருடத்தில் அதவது 2009-ம் ஆண்டு அதே திமுக ஆட்சிக்காலத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
அப்போது தான் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் எனும் பொறுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கிருந்து அரசியல் பணிகளை செய்து வந்த ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தந்து 68-வது வயதில் தமிழநாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
உதயநிதி ஸ்டாலின் :
தனது தந்தையைப் போல இளம் வயதில் அரசியலில் ஈடுபடாத உதயநிதி தனது 42-வது வயதில் தான் அரசியல் பயணத்தை தொடங்கினர். அதன்படி, 2019-ம் ஆண்டில் நடந்த நாடளுமன்ற தேர்தலில், திமுகவிற்காக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த தேர்தலில் திமுக வெற்றியும் பெற்றது, இதனால் அதே ஆண்டு திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், பல அரசியல் மேடைகளில் பேசும் பேச்சால் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட உதயநிதி, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் தேர்தலில் வெற்றியும் பெற்று எம்.எல்.ஏ.வானார்.
ஆனால், அப்போதே அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தபோது, அவருக்கு முதல் அமைச்சரவையில் வழங்கப்படவில்லை. அதன்பிறகு, 2022-ம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் தான் 45 வயதில் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு அவர் அமைச்சரானார். அதன் பிறகு தற்போது தனது 47-வது வயதில் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.