தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!
விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
தற்போது, நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதத்தில், ” கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை. பிற கட்சிகளின் சின்னங்கள் பெயர்கள் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு.
கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், “அரசியல் கட்சி சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ, அளிக்காது” என்று தெரிவித்து, தவெக கொடியில் இடம்பெறும் யானை சின்னத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
அதே நேரம், தேர்தல் நேரத்தில் யானை சின்னத்தை தவெக பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக மாற்று வாக்கு சின்னம் கொடுப்பது ஆணையத்தின் பொறுப்பு என தெரிவித்திருக்கிறது.