துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் – சபாநாயகர் அப்பாவு.!
துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நேற்று முன்தினம் அரங்கேறியது.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும், தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி 4 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர், எதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,” விமர்சனம் செய்பவர்களுக்கு என்னு டைய பணிகள் மூலம் பதில் அளிப்பேன்” என்று கூறினார்.
அந்த வகையில், துணை முதல்வர் விமர்சனம் குறித்த கேள்விக்கு அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “முதலமைச்சர் எதைச் செய்தாலும் சரியாக செய்வார். தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களுக்கு தமிழக அரசு நிறைய பணிகளை செய்து வருகிறது.
அது இன்னும் பெரியதாக செயல்படுவதற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசுக்கு துணையாக நிற்பார். இந்தியாவில் எந்த பதவி வழங்கினாலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பிரதமருக்கு விமர்சனம் இல்லையா? முதல்-அமைச்சருக்கு விமர்சனம் இல்லையா? விமர்சனம் செய்யதான் செய்வார்கள் அதான் அரசியல்” என்று கூறியுள்ளார்.
தற்பொழுது, துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி முதல் பயணமாக இன்று மதுரை செல்லவுள்ளார். நாளை மதுரையில் பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.
அதனை தொடர்ந்து விருதுநகரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இளைஞரணி செயலாளராக கடந்த 2019-இல் அவர் பொறுப்பேற்ற பிறகு, மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.