முதல் நாள்., முதல் கையெழுத்து.! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி..,
உச்சநீதிமன்ற ஜாமீன் நிபந்தனையின்படி, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினார் செந்தில் பாலாஜி.
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னர், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. அங்கு விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , திங்கள் மற்றும் வெள்ளியன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்னிறுத்தி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பின்னர், இந்த ஜாமீன் உத்தரவானது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பிணை உத்தரவாதங்கள் ஏற்கப்பட்டு, நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி. அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால், உச்சநீதிமன்ற ஜாமீன் நிபந்தனையின்படி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சென்று கையெழுத்திட வேண்டும். ஜாமீனில் வந்த முதல் நாளே சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடுவதற்காக நேரில் ஆஜராகினர் செந்தில் பாலாஜி.