செந்தில் பாலாஜி விடுதலை ஆவாரா.? “தீர்ப்பில் குழப்பம்.,” முதன்மை அமர்வு நீதிபதி பரபரப்பு…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு அளித்திருந்தார்.
இரு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நிபந்தனை ஜாமீன் :
வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் , ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் பிணை அளிக்க வேண்டும், வாரம் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும், வழக்கிற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கியது.
திமுகவினர் கொண்டாட்டம் :
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த ஜாமீன் தீர்ப்பை வரவேற்று பேசினர். செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அவர் எப்போது புழல் சிறையில் இருந்து வெளியில் வருவார் என சிறை வாயிலில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…
இப்படியான சூழலில் அமலாக்கத்துறை வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி காத்திகேயன், உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவில் குழப்பங்கள் உள்ளது எனக் கூறி திமுகவினருக்கு அதிர்ச்சியளித்துவிட்டார்.
அதாவது, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் கிடைக்கப்பெற்ற ஜாமீன் உத்தரவு நகலை , இந்த நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் நீதிபதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஜாமீன் உறுதி செய்யப்படும்.
பிணை உத்தரவாதங்கள் :
இப்படியான சூழலில், ” ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அந்த 2 நபர்கள் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம் பிணை உத்தரவாதங்களை சமர்ப்பிக்க வேண்டும். ‘ என நீதிபதி கார்த்திகேயன் கூறுவதாகவும், ” நீதிமன்றத்தில் பிணை உத்தரவுகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.” என செந்தில் பாலாஜி தரப்பும் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் , இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் ஒப்புதல் கிடைக்குமா என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இன்று ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு நாளை காலை ஆகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன .
மேலும், உச்சநீதிமன்ற ஜாமீன் உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதால், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பின் நகலை தாக்கல் செய்ய வேண்டாம் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.