ஹேமா கமிட்டி கதையில் உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’?
'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனர் சுதிப்தோ சென், படத்தின் 2ம் பாகம் தொடர்பான கதை பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார்.
கேரளா : இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள இளம்பெண் களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக்குவதாக அதில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இது உண்மை சம்பவ கதை என்றும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து. இந்த படத்துக்கு கேரளாவில் எதிப்பு கிளம்பியதால் 10 சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன. படத்தில் அடா சர்மா, பிரணவ் மிஷரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்லானி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில், மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய ஹேமா கமிஷன் அறிக்கையை மையமாக வைத்து கேரளாஸ்டோரி 2-ம் பாகம் உருவாக இருப்பதாகவும், இதில் முதல் பாகத்தில் நடித்த அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் மலையாள இணையதளங்களில் ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து, இயக்குனர் சுதீப்டோ சென் கூறும்போது, “இந்தத் தகவல் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அது உண்மையல்ல. அந்தச் செய்திகளைப் பார்த்ததும், விபுல் ஷாவும் (படத்தின் தயாரிப்பாளர்) நானும் சிரித்தோம்.
ஆனால், ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்தின் ஸ்கிரிப்டிங் நடந்து வருகிறது. “கேரளா ஸ்டோரி 2-ம் பாகம் ஹேமா கமிஷன் அறிக்கையை மையமாக வைத்து உருவாவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை” என்றார். இருந்தாலும், வேறு சில இயக்குனர்கள் ஹேமா கமிஷன் அறிக்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.