மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.? வழக்கறிஞர் கொடுத்த அப்டேட்.!
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க ஜாமீனில் எந்தவித சட்ட ரீதியிலான தடையுமில்லை என வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : 2011 – 2016 காலகட்டத்தில் அதிமுக அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி கடந்த 2023 ஜூன் மாதம், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
பல மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் , உயர்நீதிமன்றம் ஆகிவற்றை முதலில் நாடினார். அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் வழக்கு பாதிக்கப்படும் என அமலாக்கத்துறை தரப்பு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தவருடம் பிப்ரவரில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணை செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் விசாரணை வளையத்தில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்த இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வரவுள்ளார்.
இது குறித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ” செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக மட்டுமே இருப்பதை கருத்தில் கொண்டு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பிணையாக ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறை அலுவலகம் சென்று கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையில்லாமல் வழக்கு விசாரணையில் வாய்தா கேட்கக் கூடாது ஆகியவை ஜாமீனில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் ஆகும்.
உச்சநீதிமன்றம் சமீப காலமாகவே, தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளை பதிப்பது குறித்து கருத்து கூறி வருகிறது. முன்னதாக, மணீஷ் சிசோடியா, அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்ட வழக்குகளில் ஜாமீன் கொடுக்க கூடாது என்ற அடக்குமுறையை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் அதனை தகர்த்து உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. அதேபோல செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்ப்பட்டுள்ளது.
இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வருவார். அவர் மீண்டும் அமைச்சராகுவதற்கு சட்டரீதியில் எந்த தடையும் இல்லை. அவர் மீது பதியப்பட்ட இந்த வழக்கு விசாரணை முடிய நீண்ட காலமாகும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்ப்பட்டுள்ளது. சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வில் 2 நபர்கள் பிணை வழங்கியதும், செந்தில் பாலாஜி விடுதலையாவார். ” என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி , அமைச்சராவதற்கு தடையில்லை என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இதனால் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.