லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!
திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த பாவத்தை போக்குவதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடத்தப் போவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த குற்றசாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்வைத்தார். முன்னாள் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் தான் இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, வெளியான மாநில ஆய்வுகளில் வெளியான தகவல்களின்படி, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி , பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை கலந்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.
ஆளும் கட்சியினர் , முன்னாள் ஆட்சி செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை குற்றம் சாட்டி வரும் வேளையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இதனை முற்றிலும் மறுத்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த பொய்யான குற்றசாட்டுகளை ஆளும்கட்சி முன்வைக்கிறது என கூறி வருகின்றனர்.
இப்படியான சூழலில் இன்று ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றசாட்டை ஆளும் கட்சியினர் முன்வைத்து திருப்பதி ஏழுமலையான் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். லட்டு பிரசாதத்தின் மகிமையை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறு அவர்கள் கூறி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்குவதற்கு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என கூறி, இந்த சிறப்பு பூஜையில் ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வழங்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்ததாக கூறப்பட்ட குற்றசாட்டுகளின் பெயரில், திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் நிறுவனம் தங்கள் தரக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி திருப்பதி காவல் நிலையத்தில் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.