செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!
இந்திய செஸ் ஆணியில் இடமபெட்டிருந்த தமிழக வீரரான பிரக்ஞானந்தா, வைசாலி மற்றும் குகேஷ் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியையும், மகளிர் அணி அஜர்பைஜான் அணியையும் எதிர்கொண்டு வெற்றிப் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது.
இந்த வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹங்கேரி நாட்டிலிருந்து இந்திய அணியினர் இன்று தாயகம் திரும்பினர்.
அதில், குகேஷ், வைஷாலி மற்றும் பிரஞ்ஞானந்தாவிற்கு சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து கிராண்ட்மாஸ்டர் குகேஷ் இந்த வெற்றியின் அனுபவத்தைக் குறித்து பகிர்ந்திருந்தார்.
இது குறித்து பேசிய அவர், “நடப்பு உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லைரின் என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால், அவர் வரவில்லை. என்றாலும் மாற்று வீரருக்கும் தயாராக இருந்தேன். என்னை முதல் போர்டில் விளையாட வைத்தது கேப்டன் ஸ்ரீநாத்தின் வியூகம்.
அதனால் தான் தொடர்ந்து நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் கடைசி சுற்று போட்டிகளில் கோட்டை விட்டோம். அதை உணர்ந்து இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால்தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது.
ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளை சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தங்கப் பதக்கம். இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த தங்கப் பதக்கம்”, என்று தெரிவித்திருந்தார்.