ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.? 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதாகியிருந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா, இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார்.

Rowdy Sezing Raja - Former BSP Leader K Armstrong

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைதாகியுள்ளனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பதாக தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ,  ஆந்திரா மாநிலம் கடப்பாவில் சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தனர்.

கைதாகிய சீசிங் ராஜா மீது ஆம்ஸ்ட்ராங் கொலை தவிர 5 கொலை வழக்கு மற்றும் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். சீசிங் ராஜா வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்துள்ளார். அவர் மீது வேளச்சேரியில் பதியப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக ஆயுதங்களை பறிமுதல் செய்ய நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிக்கு கால்வளத்துறையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அப்போது, ஆயுதங்களை எடுத்த சீசிங் ராஜா, போலீசாரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. அதனால் காவல்துறையினரின் வாகனங்கள் மீது குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புகாக ஆய்வாளர் விமல், சீசிங் ராஜாவை சுட்டுள்ளார். அதில், 2 குண்டுகள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த சீசிங் ராஜா உடல், தற்போது கூறாய்வு பணிக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை உயர் காவல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அங்கும், ராயப்பேட்டை மருத்துவமனையிலும் பாதுகாப்பு பணியில் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு, சென்னையில் நடைபெற்ற 3வது என்கவுண்டர் இதுவாகும். ஏற்கனவே, கடந்த ஜூலை 14இல் திருவேங்கடம் மாதவரம் பகுதியில் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அடுத்து கடந்த செப்டம்பர் 18இல் காக்கா தோப்பு பாலாஜி, வியாசர்பாடி பகுதியில் என்கவுண்டரில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா மனைவி அண்மையில், தனது கணவர் சீசிங் ராஜாவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுளள்னர் என தனது குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்