திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?
கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு ;
லட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பதி பிரசாதம் தான். திருப்பதியில் 1445 ஆம் ஆண்டு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1455 ஆம் ஆண்டு அப்பம் வழங்கப்பட்டது. 1460 ஆம் ஆண்டு அப்பத்திற்கு பதில் வடை வழங்கப்பட்டது. 1468 ஆம் ஆண்டு முதல் அதிரசம் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்பட்டது .
பிறகு 1547 ஆம் ஆண்டு மனோகரம் என்ற இனிப்பு வழங்கப்பட்டது. 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து ஏழுமலையானுக்கு லட்டு பிரசாதமாக படைக்கப்பட்டது. ஏனென்றால் அப்பம், வடை ,அதிரசம் ,மனோகரம் போன்றவை விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருள் ஆகும். அந்த காலத்தில் திருமலை யாத்திரை செல்பவர்கள் ஏழு மலையைக் கடந்து சுவாமியை தரிசிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு உணவாக இந்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இவை விரைவில் கெட்டுவிடும் என்பதால் 1803 ஆம் ஆண்டு முதல் லட்டு முதலில் பூந்தியாக பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டது. அதில் முக்கியஸ்தரர்களுக்கு மட்டும் முழு லட்டாக வழங்கப்பட்டது. பிறகு 1940 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு பிரசாதம் தயாரித்து பூஜை செய்து வந்தவர்கள் கல்யாணம் அய்யங்கார் குடும்பத்தினர் ஆவார். இவர்கள்தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதம் ஆக்கியவர்கள் என கூறப்படுகிறது .ஒரு முறை பணக்கார வியாபாரி ஒருவர் ஏழுமலையான் இடம் தன் வேண்டுதலை நிறைவேற்றினால் பிரம்மாண்டமான லட்டு தயாரித்து பெருமாளின் திரு கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக் கொண்டார் .
அதன்படி பெருமாளும் அவர் வேண்டுதலை நிறைவேற்றியதால் அவர் லட்டை வழங்கினார் . இந்த லட்டை மிராசுதாரர்கள் செய்து வந்த நிலையில் 1966 ஆம் தேவஸ்தானம கைக்கு சென்றது. தற்போது வரை திருமலை தேவஸ்தானமே லட்டு தயாரித்து வருகின்றது.
உலகில் திருப்பதி லட்டை போல் எந்த இடத்திலும் தயாரிக்கப்படுவது இல்லை என்பதே இதன் சிறப்பாகும். இதன் சுவை மற்றும் நறுமணம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் திருப்பதி லட்டு என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டுமே உரியது. இதனை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது.உலக புகழ் பெற்ற திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது .
ஏழுமலையானை தரிசித்து விட்டு பக்தர்கள் நேராக செல்வது லட்டு வாங்குவதற்கு தான். ஆம்.. திருப்பதி சென்றதற்கு அடையாளமே லட்டு வாங்கி வருவது தானே.. ஸ்ரீனிவாச பெருமாளின் அனுகிரகத்தாலும் லட்டின் மனோகரமான சுவையாலும் இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றது.