லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருந்தார்.
அதன்படி தற்போது விஜயவாடாவில் பத்திரிகையளர்களை சந்தித்து ஜெகன் மோகன் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நான் மறுக்கிறேன். ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மற்றும் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்காகவே சந்திரபாபு நாயுடு லட்டு பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளார்.
திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருக்கும் குற்றச்சாட்டு உலகில் எவருமே கூற முடியாத குற்றச்சாட்டாகும். சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்தும் மக்களை திசை திருப்பும் கட்டுக்கதைகள் தான். எனது ஆட்சிக்காலத்தில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை.
அரசியலுக்காக கடவுளின் பெயரை சந்திரபாபு நாயுடு பயன்படுத்துவது கீழ்த்தரமானது. இது போன்ற பொய்களை கூறுவது தர்மமா? திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்க்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைனில் டெண்டர் விடப்படுவது வழக்கம்.
எங்கள் ஆட்சியில் டெண்டர் நடைமுறையில் எந்த வித மாற்றமுமில்லை. NABL சான்றிதழுக்கு பிறகும் மூன்றுக்கட்ட சோதனைகளில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே லட்டு தயாரிக்க அனுமதிக்கப்படும். எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்தும் இருக்கிறோம். தெலுங்கு தேசிய கட்சி இந்த விஷயத்தில் மத அரசியல் செய்கிறது, ” என்று பேட்டியில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருக்கிறார்.