நவராத்திரி 2024 இல் எப்போது துவக்கம்?.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை திதி முடிந்து பிரதமை திதி தொடங்கி தசமை திதி வரை பத்து நாட்கள் நவராத்திரி ஆக அனுசரிக்கப்படுகிறது.

Navarathiri (1)

சென்னை –நவராத்திரி இந்த ஆண்டு வரும் தேதி மற்றும் நவராத்திரி உருவான வரலாறு பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நவராத்திரி  என்றால் என்ன ?

சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பானது. இந்தியாவில்  பிரம்மாண்டமான பண்டிகை தான் நவராத்திரி .வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றது. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட  நவராத்திரி என்றும் ,புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்றும், தை மாதம் வரும் நவராத்திரி மகா நவராத்திரி என்றும் பங்குனி மாதம் வருவது வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி  என்பது அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் அனுஷ்டிக்கப்படுவதாகும் . இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவியின் 9 அவதாரங்களை குறிப்பிடுகின்றது. மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி ,இந்துராணி ,சரஸ்வதி, சாமுண்டி, நரசிம்மி என 9 அவதாரங்களை அம்பிகை கொண்டுள்ளார். ஆனால் இவற்றிற்கு அடிப்படை சக்தி ஒன்றுதான் இவர்களைப் போற்றி வணங்கும் விழாவாக தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி 2024 இல் எப்போது?

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை திதி முடிந்து பிரதமை திதி தொடங்கி தசமை திதி வரை பத்து நாட்கள் நவராத்திரி ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி வியாழக்கிழமை துவங்கி அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவடைகிறது. முதல் மூன்று நாட்கள் துர்கையை வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும் ,கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.

நவராத்திரி தோன்றிய வரலாறு;

பல அசுரர்கள் இந்த உலகை ஆட்டி படைக்கும் சமயத்தில் இவர்களை அழிக்க வேண்டி முப்பத்து  முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். அப்போது அவர்கள் தங்களின் சக்தியை பயன்படுத்தி ஒரு சக்தியை உருவாக்கினர், அதில் ஒன்பது சக்திகள் உருவாக்கி துர்க்கை என்ற ஒரே சக்தியாக உருவாக்கப்பட்டது.

இப்போது அம்மன் அழகிய பதுமை போல பூலோகத்திற்கு வருகிறார் ..அப்போது அரக்கர்களின் வேலைக்காரர்கள் அம்பாளை பார்த்து தங்கள் ராஜாவுக்கு ஏற்றவர் இவள் தான் என முடிவு செய்து சக்தியிடம் தங்கள் ராஜாவின் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் தேவியோ யார் என்னை போரில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை மணந்து கொள்கிறேன் என வாக்களிக்கிறார். தேவியும் பல அசுரர்களையும் அழித்துவிட்டார்.

ஆனால் ரத்த பீஜன் என்ற அரசன் கடும் தவம் செய்து ஒரு வரத்தைப் பெற்று இருந்தார்,  அவன் உடம்பிலிருந்து வரும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு ரத்த பீஜன் உருவாகுவான் என்ற வரம்  பெற்றிருந்தான் இந்த வேளையில் அம்மன் அவரை அழிக்கும் போது ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு அரக்கன் உருவாகி இந்த உலகே ரத்த பீஜனால்  நிரம்பியிருந்தது. அப்போது தேவி தம்மிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை இவனிடம் இருந்து வரும் ரத்தத்தை குடிக்குமாறு உத்தரவிட்டார். சாமுண்டியும்  அவ்வாறு செய்ததால் ரத்த பீஜனும் அழிக்கப்பட்டான் இப்படி ஒன்பது நாட்கள் எடுத்துக்கொண்டு அம்மன் அசுரர்களை அளித்து வெற்றி நிலைநாட்டினார்.

அப்போது கொலுவாக  நின்ற தேவர்கள் அரக்கர்களை அழிப்பதற்காக தங்கள் சக்திகளை தேவியிடம் கொடுத்தனர். இதனை குறிப்பிடும்  வகையில் தான் நவராத்திரியில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது.  ஓரறிவு உயிரினம் முதல் அனைத்திற்கும் ஆதாரமான அம்பிகை வரையிலும் கொலு பொம்மைகளாக  வைக்கப்படுகிறது. இதுவே நவராத்திரி தோன்றிய வரலாறு ஆகும்.

கொலு வைத்தால் நம் வீட்டில் அனைத்திலும் அம்பிகை எழுந்தருளுவார் என்ற ஐதீகமும் உள்ளது. எந்த ஒரு வழிபாடாக  இருந்தாலும் அதற்கு ஒரு வரலாறு இருக்கும் அதை தெரிந்து கொண்டு கொண்டாடும்போது மனம் ஆத்மார்த்தமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்