“விஜய் அரசியல் வருகையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை”! – சீமான் பேட்டி!
இன்று புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
புதுக்கோட்டை : சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசி இருக்கிறார்.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘விஜய், மக்கள் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்ததை எப்படி பார்க்கிறிர்கள்?’ என சீமானிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான் பதிலளித்து கூறியதாவது, “அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவித்தது வரவேற்கதக்கது தான் அதே போல பெரியாருக்கும் மாலை அணிவித்து வரவேற்கதக்கது தான்.
அதே போல திருவிக மற்றும் மறைமலை அடிகள் உள்ளிட்டோரையும் போற்றுவதற்கு விஜய் முன்வர வேண்டும், பெரியார் மட்டும்தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. அவரும் போராடினார் என்பது தான் எனது கருத்து”, என கூறினார்.
அதனைத் தொடர்ந்து விஜயின் அரசியல் வருகையால் எந்த கட்சிக்கு பாதிப்பு இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என சீமானிடம் கேட்ட போது, “விஜய் அரசியல் வருகையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. 2026-சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு”, என சீமான் பதிலளித்தார்.
அடுத்ததாக விஜய்க்கு நாடாளும் ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான தகுதி என்பது அவரிடம் இருக்கிறதா? என்று சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், “உரிமை இழந்து, உடமை இழந்து நிற்கிற ஒரு தேசிய இனத்திற்கு தலைமை தாங்க வேண்டுமென்றால் திரைபுகழ் மட்டும் போதாது.
எனக்கு என் தலைவன் கற்பித்தது என்னவென்றால் மரணத்திற்கு அஞ்சாமல் அதை எதிர்க்கத் துணிந்த துணிவு வேண்டும். அப்போது தான் தமிழ் இனத்திற்கு தலைமை ஏற்கும் தகுதி வரும். அது மட்டுமின்றி நமது மொழியின் வரலாறு, நம்முடைய நிலம் என்ன? அதன் வளம் என்ன? என அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை என் தம்பி விஜய் கற்று கொண்டு வர வேண்டும், வருவார் என நம்புவோம்” , என்று சீமான் பதிலளித்தார். அதை தொடர்ந்து, ‘ஒரு வேளை உங்கள் கொள்கையுடன் விஜய் ஒத்துப்போவார் என்றால் 2026-இல் அவருடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா?’ என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு சீமான், “நீங்கள் அதிகமுறை இந்த கேள்வியை என்னிடம் கேட்கறீர்கள் ஆனால் அவரிடம் கேட்கவில்லை. அவர் மாநாட்டிற்கு பிறகு உங்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள், அதற்கு அவர் “நான் அண்ணன் உடன் பயணிப்பேன் என அவர் சொன்னால் அப்போது இதை குறித்து ஆலோசிப்போம்”, என்று சீமான் பதிலளித்தார்.