துணை முதல்வராகிறாரா உதயநிதி.? தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின்.!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பிவிட்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்பதை , திமுக அமைச்சர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த ஆதரவு குரல் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் முதலமைச்சர் முன்னிலையிலேயே எதிரொலித்தது.
நேற்று திமுக முப்பெரும் விழா முடிந்ததை அடுத்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலையில் தலைமை செயலகம் சென்றார். அங்கு துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு என மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிகள் என மூத்த திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில், மிக முக்கியமாக அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன. மூத்த அமைச்சர் ஒருவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்றும், மதுவிலக்கு, பள்ளிக்கல்வித்துறை, மின்சாரத்துறை போன்ற முக்கிய துறைகள் இடம் மாறலாம் என்றும் செய்திகள் வெளியாகிறது.
அதுமட்டுமின்றி, துணை முதல்வராக உதயநிதியை அறிவிப்பது தொடர்பாகவும், அவருக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருப்பதால், இன்று மாலை ஆளுநர் ஒப்புதலோடு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி குறித்த ஆலோசனை என எந்த தகவலும் இதுவரையில் உறுதியாக திமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பயணம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சரவை மற்றம் குறித்து கூறுகையில் , ” மாற்றம் ஒன்றே மாறாதது. திமுக சொன்னதை செய்யும். செய்வதை சொல்லும். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழும்.” என பேசியிருந்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் உறுதி என்றும் கூறப்படுகிறது.