விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா.? இபிஎஸ் ‘பளீச்’ பதில்.!
விசிக மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால்,அதில் கலந்து கொள்வதற்கு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம் என எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது . பூரண மதுவிலக்கு என்பது இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த மாநாடு பற்றி அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் எனக் கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதனால் , திமுக கூட்டணியில் விரிசல் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு நிகழ்ந்தது. மேலும், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.
இப்படியான சூழலில், விசிக நடத்தும் மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ளுமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. இந்த கேள்விக்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த சிலர் கருத்து கூறியிருந்தாலும், உறுதியாக எந்த பதிலும் கிடைக்கபெறாமல் இருந்தது.
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் விசிக மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” வி.சி.க மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி எங்களுக்கு முறையான அழைப்பு வரவில்லை. அப்படி அழைப்பு வந்தால், எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்வோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, ” எங்கள் பிரதான எதிரி திமுக. அதனை எதிர்த்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க, நல்ல மனமுடைவார்கள், எங்கள் கொள்கையோடு ஒத்துவரும் கட்சிகளோடு நாங்கள் சேர்ந்து பயணிப்போம்.”என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறினார்.