கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.! அமைச்சரின் அசத்தல் அப்டேட்.!
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைவது உறுதி என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
கோவை : கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதிகளில் கோவையில் முக்கிய வாக்குறுதியாக, அங்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதாகும். இதற்கான நடவடிக்கையில் திமுக அரசு உடனடியாக களமிறங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் என நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு, அதில், கோவை ஒண்டிபுதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அந்தப் பகுதி சரவதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று கோவையில் YES எனும் சர்வதேச நிறுவனத்தின் கோவை கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவையில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் பற்றி செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், ” தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டிருந்த கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் வாக்குறுதி குறித்து, தேர்தல் முடிந்து அடுத்த சில நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து, அவரே இடத்தை தேர்வு செய்தார். தற்போது அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளது. விரைவில் மிகப் பிரம்மாண்டமாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவது.” உறுதி எனக்கூறினார்.
ஏற்கனவே, கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு, விளையாட்டுத் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.